மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை பிரச்சனையில் இன்று முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.
சிங்கூரில் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான மாநில அரசு 400 ஏக்கர் நிலத்தை பலவந்தமாக பிடுங்கி கொண்டு விட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் கடந்த பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த பிரச்சனையில் தீர்வு எட்டுவதற்காக, மாநில ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி, இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.
இந்த பேச்சுவார்த்தை நேற்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. மாநில அரசு கேட்டுக் கொண்டதால், பேச்சுவார்த்தை மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சாலை மறியல் போராட்டத்தை விலக்கி கொள்ளாததால் தான் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மம்தா பானர்ஜி சாலை போக்குவரத்தை சீர் செய்ய வேண்டியது மாநில காவல் துறையின் கடமை. மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பதிலடி கொடுத்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட உள்ள விபரத்தை பிரதமர் மன்மோகன் சிங் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கு ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தலைமையில் பேச்சுவார்த்தை துவங்கியது.
இதில் மாநில அரசு சார்பில் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிருபம் சென் தலைமையில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தை நடத்திவரும் திரிணாமுல் காங்கிரஸ், கிருஷி ஜோமி ரக்சா கமிட்டி (விவசாய நில மீட்பு இயக்கம்) சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பார்த்த சாட்டர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) தலைமை தாங்கினார்.
மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரை தொடர்ந்து மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து ஆளுநர் மோகன் கோபால் கிருஷ்ண காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமாகவும், பயனுள்ள வகையிலும் அமைந்தது என்று தெரிவித்தார்.
இது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கூர் பிரச்சனை தொடர்பாக மாநில அரசு பிரதிநிதிகளுக்கும், கிருஷி ஜோமி ரக்சா கமிட்டி பிரதிநிதிகளுக்கும் இடையே மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பிரச்சனையில் முடிவு எட்டும் விதத்தில், இரண்டு தரப்பும் அவர்களின் கருத்துக்களை எடுத்து கூறினார்கள். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மீண்டும் பேச்சு வார்த்தை நாளை (இன்று) காலை 11 மணிக்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பார்த்த சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக விவாதித்தோம். பேச்சுவார்த்தை பயனுள்ள முறையில் இருந்தது என்று தெரிவித்தார்.