கார் மோதி 6 பேர் சாவு: சஞ்சீவ் நந்தாவிற்கு 5 ஆண்டுகள் சிறை!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (19:48 IST)
குடிபோதையில் காரை ஓட்டி சாலையில் நடந்து சென்ற 6 பேரைக் கொலை செய்த வழக்கில் கடற்படை முன்னாள் தளபதி எஸ்.எம்.நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தெற்கு டெல்லியில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி அதிகாலையில் வெளிநாட்டு சொகுசுக் காரை சஞ்சீவ் நந்தா குடிபோதையில் ஓட்டிச் சென்றபோது, சாலையில் நடந்து சென்ற 3 காவலர்கள் உட்பட 6 பேர் மீது மோதினார். இதில் 6 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை, சஞ்சீவ் நந்தா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், இன்று குடிபோதையில் காரை ஓட்டிய சஞ்சீவ் நந்தாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதற்கான ஆதாரத்தை அழித்த அவரின் நண்பர் ராஜீவ் குப்தாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆதாரத்தை அழிக்க உதவிய சஞ்சீவ் நந்தாவின் வேலையாட்கள் போலா நாத், ஷியாம் சிங் ஆகிய இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.