அணு சக்தி ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (13:28 IST)
புது டெல்லி: நமது நாடு அணு ஆயுத சோதனை நடத்தினால் நம் நாட்டிற்கு வழங்கப்படும் அணு எரிபொருள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் நமது நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறார் என்று குற்றம்சாற்றப்பட்டுள்ளதுடன், தேசநலன் கருதி அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
"இந்தியாவிற்குள்ள அணு ஆயுதச் சோதனை நடத்தும் உரிமைகள், சரியான நேரத்தில் அணு எரிபொருள் வினியோகித்தல், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்யும் வாய்ப்பைப் பெறுதல், யுரேனியம் செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் பெறுதல் ஆகியவை தொடர்பாக அமெரிக்கா அளித்துள்ள உறுதிமொழிகள் அடிப்படையற்றவை என்பது அந்நாட்டு நிர்வாகம் அளித்துள்ள கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மேற்கண்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங் நமது நாடாளுமன்றத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளும் சட்டபூர்வமான ஆதாரங்கள் அற்றவை. விரும்பியோ விரும்பாமலோ நாடாளுமன்றத்தை பிரதமர் தவறாக வழிநடத்தியுள்ளார்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.