காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (14:54 IST)
பிரிவினைவாதிகள் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதை அடுத்து, காஷ்மீரில் 11 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று காலை வழக்கம்போல கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் இயங்கத் துவங்கின. அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவையும் திறந்திருந்தன.
சாலைகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வழக்கமான போக்குவரத்தைப் பார்க்க முடிந்தது. இருந்தாலும், ஆங்காங்கு பாதுகாப்புப் படையினரின் தீவிரச் சோதனைகளும் நடந்து வருகின்றன.
பதற்றத்தின் காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அனுப்ப மறுத்துவிட்ட காரணத்தால், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்படவில்லை. நாளை முதல் வழக்கம்போல இயங்க முயற்சிப்போம் என்று கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது பற்றி முன்கூட்டிய அறிவிப்பு எதுவும், கல்வி நிறுவனங்களுக்குத் தரப்படாததும், இற்த முடக்கத்திற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் போராட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அடுத்தகட்ட போராட்டம் பற்றி முடிவெடுக்கும் வரை தினசரி மாலை 4.00 மணிக்கு மேல் முழு அடைப்புத் தொடரும் என்றும் பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதிக்கும் அரசிற்கும் இடையில் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜம்முவில் இயல்புநிலை திரும்பினாலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குச் செல்லும் சாலைகளை வர்த்தகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று கோரி பிரிவினைவாதிகள் நடத்திவரும் போராட்டத்தினால் காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது.