அணு விஞ்ஞானி பிளேசிட் ரோட்ரிக்ஸ் காலமானார்

திங்கள், 1 செப்டம்பர் 2008 (15:08 IST)
1992 முதல் 2000 ஆவது ஆண்டு வரை கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்தவரும், அணு எரிபொருள், உலோகம், உலோக இணைப்பு ஆகிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி பிளேசிட் ரோட்ரிக்ஸ் காலமானார்.

webdunia photoWD
1940ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்த பிளேசிட் ரோட்ரிக்ஸ், கேரள பல்கலைக்கழகத்தில் இருந்து இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார்.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியில் கல்விக் கழகத்தில் பொறியியலில் உலோக உருவாக்கக் கல்வியில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவின் டென்னசி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்று பிறகு மீண்டும் பெங்களூர் அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் (பிஎச்.டி,)பெற்றார்.

1960ஆம் ஆண்டு தனது 20ஆம் வயதில் அணுசக்தித் துறையில் இணைந்து பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் துவங்கிய ராட்ரிக்ஸ், 1977ஆம் ஆண்டு அணு உலை உருவாக்கும் ஆராய்ச்சிக்காக கல்பாக்கம் சென்றார்.

18 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு 92ல் இந்திராகாந்தி அணுசக்தி மையத்தில் இயக்குநர் பொறுப்பை ஏற்றார்.

1998ம் ஆண்டு இந்தியா இரண்டாவது முறையாக அணு குண்டு சோதனை நடத்தியபோது அதில் முக்கியப் பங்காற்றியவர்களில் பிளேசிட் ரோட்ரிக்சும் ஒருவர். இந்தியா வெடித்தது ஹைட்ரஜன் குண்டு அல்ல என்று கதைகட்டி விடப்பட்டபோது, சென்னையில் சர்வதேச பத்திரக்கையாளர்களும் திரண்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்தியா அணுசக்தி அமைப்பு நடத்திய சோதனையின் அடிப்படையும், தன்மையும் எத்தகையது என்பதை விளக்கிப் பேசிய ரோட்ரிக்ஸ், இந்தியாவின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இச்சோதனை நடத்தப்பட்டதை தெள்ளத்தெளிவாக விளக்கினார்.

உலோக உருவாக்கத்திலும், உலோக அறிவியலிலும், உலகத்தின் தலைசிறந்த நிபுணராகத் திகழ்ந்த பிளேசிட் ரோட்ரிக்ஸ், பல சர்வதேச, தேச விருதுகளைப் பெற்றவர்.

பிளேசிட் ரோட்ரிக்ஸ் அவர்களுக்கு மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.