அமர்நாத் பிரச்சனை முடிவுக்கு வந்தது : அரசு-சமிதி இடையே உடன்பாடு!
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (11:11 IST)
அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கு நிலம் வழங்கியதை ரத்து செய்ததால் உண்டான பிரச்சனையில், அரசு மற்றும் ௦ஸ்ரீ அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதி (ஸாஸ்) இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 61 நாட்களாக ஜம்முவில் நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன.
அமர்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு குடில் அமைப்பதற்காக கோவில் நிர்வாகத்திற்கு 100 ஏக்கர் நிலத்தை வழங்கி ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு காஷ்மீரிலுள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நிலம் வழங்குவதற்கான உத்தரவை மாநில அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.
ஜம்மு - காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்முவிலுள்ள இந்து அமைப்புகள் மற்றும் ஸ்ரீ அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதி அமைப்பு உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன.
இதனால், காஷ்மீருக்கு வரும் அத்தியாவசிய பொருட்கள் தடைபடுவதாக கூறி, காஷ்மீரிலுள்ள பல்வேறு அமைப்புகளும் தூண்டிவிட்டு போராட்டத்தில் குதித்ததால் அரசுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஸாஸ் அமைப்பின் தலைவர்களுக்கும், ஜம்மு - காஷ்மீர் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நால்வர் குழுவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் வரும் காலத்தில் மட்டும், அதாவது 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக குடில் அமைக்க பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
சுமார் 6 மணி நேரம் நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த உடன்பாட்டில் இரு தரப்பும் கையெழுத்திட்டன.
இதைத் தொடர்ந்து, "நாங்கள் போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். எனினும் இப்போதைக்கு முழுமையாக திரும்பப் பெறவில்லை. எங்களது கோரிக்கைகள் சிலவற்றில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை," என்றார் ஸாஸ் அமைப்பின் லீலா கரண் ஷர்மா.
தற்போது, 2 மாதங்களுக்குப் பிறகு போராட்டங்கள் அனைத்தும் நிறுத்திக் கொள்ளப்பட்டாலும், ஜம்மு மற்றும் இதர மூன்று இடங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமலில் உள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.