புதுச்சேரி முதலமைச்சராக இருந்த ரங்கசாமி, தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரங்கசாமியை பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 25ஆம் தேதி நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மேலிடப் பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார் ஆகியோர், கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் நேற்று முன்தினம் அறிக்கை அளித்தனர்.
இந்நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியை சென்னையில் நேற்று முன்தினம் சந்தித்த ரங்கசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையில், ரங்கசாமி பதவி விலக கட்சி மேலிடம் உத்தரவிட்டதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.