ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபுசோரன் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்றனர்.
மொராஹ்படி மைதானத்தில் அம்மாநில ஆளுநர் சையத் சிப்தே ரஸி பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிபுசோரன் மற்றும் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 2 பேர் பெண் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் விவரம்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சுதிர் மஹதோ, நலின் சோரன், துலால் புஹ்யான், ஒருங்கிணைந்த கோயன் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பந்து திர்கே, ஜோபா மஞ்சி (பெண்), தேசியவாத காங்கிரஸின் கமலேஷ் சிங், ஜார்க்கண்ட் கட்சியின் எனோஸ் எக்கா, பார்வர்ட் பிளாக் கட்சியின் அபர்ணா சென்குப்தா (பெண்) மற்றும் சுயேச்சை உறுப்பினர்களான ஸ்டீபன் மராண்டி, ஹரிநாராயண் ராய், பானு பிரதாப் சாஹி.
மதுகோடா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த 17ஆம் தேதி சிபுசோரன் விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து மதுகோடா பதவிவிலகினார்.
இதையடுத்து அரசு அமைக்கத் தேவையான பெரும்பான்மை தனக்கு இருப்பதால், ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் சிபுசோரன் கோரினார். இதையடுத்து ஆளுநர் அழைப்பின் பேரில் சிபுசோரன் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.