ஜம்முவில் பதற்றம் குறைந்தது: இயல்பு நிலை பாதிப்பு!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (17:33 IST)
அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரம் தொடர்பாக ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி நடத்துவதாக இருந்த ஊர்வலம், தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால் ஜம்முவில் பதற்றம் குறைந்தது. பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு நீடிப்பதன் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாலும், புறநகர்ப் பகுதியில் அவர்கள் நடத்தியுள்ள தாக்குதலில் பலர் பலியாகியுள்ளதாலும், ஊர்வலத்தைக் கைவிட வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எங்களது போராட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்று ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதி தலைவர் நரேஷ் பதா தெரிவித்தார்.
தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் ஓரிரு நாட்களில் அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் அமைத்துள்ள குழுவுடன் அடுத்த சுற்றுப் பேச்சைத் துவங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
ஜம்முவில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் சிலர் இன்று காலை நடத்தியுள்ள தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதியின் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால் ஜம்முவில் பதற்றம் குறைந்திருந்தாலும், பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பாரி, பிராமணா, பிர்புர், சம்பா உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.