தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கட்சி துவங்கினார்!
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (21:10 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது கட்சிக்கு 'பிரஜா ராஜ்யம்' என்று பெயரிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் விளங்கி, அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் சிரஞ்சீவி, திருப்பதியில் தான் நடத்திய பொதுக் கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.
தான் துவங்கியுள்ள புதிய கட்சிக்கு பிரஜா ராஜ்யம் (மக்களாட்சி) என்று பெயரிட்டுள்ள சிரஞ்சீவி, இளைஞர்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
மத சார்பற்று சமூக நீதிக்காகப் போராடப்போவதாக அறிவித்துள்ள அவர், ஆந்திர மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளுக்குக் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகளே காரணம் என்று குற்றம்சாற்றினார்.
ஜனவரி, 1983 இல் தெலுங்கு தேசம் கட்சியைத் துவக்கி பின்னர் முதல்வர் பதவியில் அமர்ந்த என்.டி.ராமாராவிற்குப் பிறகு, தெலுங்கு திரையுலகத்தில் இருந்து அரசியலில் இறங்கும் இரண்டாவது பெரிய நட்சத்திரம் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி கட்சியின் கொடி, வெள்ளை, பச்சை வண்ணங்களுடன் நடுவில் சூரியன் பொறிக்கப்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நொடியும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சக்தியைப் பரப்புவதே கொடியின் அர்த்தம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் பொது மக்களும் பங்கேற்றனர்.