ஒரிசாவில் கலவரம்: 9 பேர் பலி- காலவரையற்ற ஊரடங்கு அமல்!
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:52 IST)
விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒரிசாவில் நடக்கும் கலவரங்களில் மேலும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள கந்த்மால் மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. மேலும் விவரங்களைச் சேகரித்து வருகிறோம் என்று ஒரிசா தென் மண்டல வருவாய் மண்டல ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கந்த்மால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் சில வீடுகளுக்கு மர்மக் கும்பல் ஒன்று தீ வைத்ததில் 9 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன் கலவரங்களுக்குப் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
வி.எச்.பி. தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் கடந்த சனிக்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் நேற்று நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின் போது, பர்கார்க், கந்த்மால் பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் கன்னியாஸ்திரி ஒருவர் உள்பட இரண்டு பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள்.
பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் கந்த்மால் மாவட்டத்தில் புல்பானி, பலிகுடா, உதய்கிரி, நவுகான், டிகாபலி உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிவிரைவுப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பு கருதி பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர் என்று பி.டி.ஐ. கூறுகிறது.
இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட சாதுக்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.