ஒரிசாவில் 12 தேவாலயங்களுக்கு தீ! கன்னியாஸ்திரி பலி!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (21:15 IST)
ஒரிசாவில் 12க்கும் மேற்பட்ட தேவாலயங்களை விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிருடன் எரிந்து பலியானதுடன், பாதிரியார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஒரிசாவில் புல்பானி அருகிலுள்ள ஜலேஷ்பதா ஆஸ்ரமத்திற்குள் சனிக்கிழமை இரவு நுழைந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றனர்.
இதைக் கண்டித்து இன்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின் போது, பர்கார்க் நகரத்தில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் புட்பலி என்ற இடத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் நுழைந்த மர்மக் கும்பல் ஒன்று, அந்த இல்லத்தின் இரண்டு அறைகளை மூடித் தீ வைத்ததாகவும், இதில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிருடன் எரிந்து பலியானதுடன் பாதிரியார் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜி.சி. மொஹபட்ரா தெரிவித்துள்ளார்.
பலியான கன்னியாஸ்திரியின் விவரம் தெரியவில்லை என்றும், மர்மக் கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முழு அடைப்பு போராட்டத்தால் ஒரிசாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பலிகுடா, பர்காமா, டிகாபலி, உதய்கிரி, புல்பானி, நெளகான் ஆகிய இடங்களில் 12க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், வழிபாட்டுக் கூடங்களும், வாகனங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளதாகவும், கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய பகுதிகளில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், அவர்களைத் தடுக்க முயன்ற காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாக புல்பானி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் குமார் தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐ. கூறுகிறது.