தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 33 கோடியாக உயர்வு!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:06 IST)
நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை, கடந்த ஜூலை மாத இறுதியில் 33.48 கோடியைத் தொட்டது என்று இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 90 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் (வயர்லைன் மற்றும் வயர்லெஸ்) தரப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஜூன் மாதத்தில் பெறப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை 88 லட்சமாக இருந்தது.
நாட்டில் உள்ள தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை, கடந்த ஜூலை மாத இறுதியில் 33.48 கோடியைத் தொட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இது 32.57 கோடியாக இருந்தது.
நடப்பாண்டின் ஜூலை மாத இறுதியில் அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 45.7 லட்சத்தை எட்டியுள்ளது. இது, ஜூன் மாதத்தில் 43.8 லட்சமாக இருந்தது.
ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தி ஜூலை மாத இறுதியில் 29.08 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது ஜூன் மாதத்தில் 28.33 விழுக்காடாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.