'சிமி' இயக்கம் மீதான தடை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (18:11 IST)
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) மீதான தடையை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த இயக்கம் தனது பதிலை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சிமி இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து பிப்ரவரி 7 இல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் ஆகஸ்ட் 5 அன்று இரத்து செய்து, சிமி இயக்கத்தின் மீதான தடையையும் நீக்கியது. தேச விரோத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றில் சிமிக்குத் தொடர்புள்ளது என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான புதிய ஆதாரங்கள் எதையும் அரசு தாக்கல் செய்யவில்லை என்று தீர்ப்பாயம் கூறியிருந்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து, சிமி இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது.
இந்நிலையில், இன்று இந்த மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிமி இயக்கத்தின் மீதான தடையை மேலும் 6 வாரத்திற்கு நீட்டித்ததுடன், இன்னும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி அந்த இயக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 24 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், அண்மையில் ஜூலை 26 அன்று 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு உள்பட இந்த ஆண்டு நடந்துள்ள பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய குற்றத்தின்பேரில் கடந்த பிப்ரவரி முதல் சிமி இயக்கத்தவரின் மீது புதிதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 89 வழக்குகளில் சுமார் 1,900 சிமி இயக்கத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அடைப்படையாகக் கொண்டு, அந்த இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வேண்டினார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ள தேச, பன்னாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் சிமி இயக்கத்திற்குத் தொடர்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.