3 சுயேச்சைகள் உட்பட 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: ஆட்சி அமைப்பாரா சிபுசோரன்?

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (15:51 IST)
ஜார்க்கண்டில் புதிய அரசை அமைப்பதற்காக முயற்சி மேற்கொண்டுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபுசோரனுக்கு, மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர்களில் 3 பேர் சுயேச்சைகள்.

ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மையை திரட்டி வரும் சிபுசோரன், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தனது வீட்டுக்கு இன்று காலை வந்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு அவரிடம் சிபுசோரன் கேட்டுக் கொண்டதாகவும் மராண்டி தெரிவித்துள்ளார்.

சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான பானு பிரதாப் சாஹி, எனோஸ் எக்கா, ஹரிநரேன் ராய், ஒருங்கிணைந்த கோயன் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோபா மஞ்ஜி, பாந்து திர்கே என மொத்தம் 5 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக சோரன் தன்னிடம் அப்போது தெரிவித்தாக மராண்டி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சிபுசோரனுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது முடிவை தெரிவித்து விட்டார்கள் என்றும், தாம் மட்டுமே இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் மராண்டி பதிலளித்தார். எனினும் மராண்டி சோரனுக்கு ஆதரவு அளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17ஆம் தேதி 17 உறுப்பினர்களைக் கொண்ட சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி கோர்ச்சா கட்சி தனது ஆதரவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, சுயேச்சை எம்.எல்.ஏ. மதுகோடா தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை 23ஆம் தேதி மதுகோடா அம்மாநில ஆளுநரிடம் அளித்தார்.

மொத்தம் 81 உறுப்பினர்களை கொண்டுள்ள ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் 17 உறுப்பினர்களும், காங்கிரஸில் 9 உறுப்பினர்களும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் 7 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒருவர் என மொத்தம் 34 உறுப்பினர்கள் சிபுசோரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தற்போது மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் மொத்தம் 39 உறுப்பினர்களின் ஆதரவை சிபுசோரன் பெற்றுள்ளார். இன்று மாலை அம்மாநில ஆளுநர் சையது சிப்தே ரஸியை சந்திக்கும் சிபுசோரன் தனது கட்சி தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்