ஒரிசா: வி.ஹெச்.பி. தலைவர்கள் படுகொலை!

ஒரிசா மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் உட்பட 5 பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் சுட்டுக் கொன்றனர்.

கந்த்மால் மாவட்டம், புல்பானி என்ற இடத்தில் ஜலேஷ்பதா ஆஸ்ரமம் உள்ளது. இங்கு நேற்று மாலை கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய 30 மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்வாமி லட்சுமானந்தாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலையை தடுத்த முயன்ற மேலும் நால்வரையும், அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இறந்தவர்கள் வி.ஹெச்.பி. அமைப்பின் முக்கியத் தலைவர்களான அரூபானந்தா, சின்மயானந்தா மற்றும் மாதாபக்தி மயி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தவிர அடையாளம் தெரியாத மற்றொருவரும் இறந்தவர்களின் அடங்குவார்.

ஏற்கனவே ஸ்வாமி லட்சுமானந்தாவை மாவோ தீவிரவாதிகள் 8 முறை கொல்ல முயன்றனர். எனவே இப்படுகொலையை அவர்கள் தான் நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்