3-வது அணி: காரத்துடன் ச‌ந்‌திரபாபு நாயுடு ஆலோசனை!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (17:51 IST)
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை இன்று புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

webdunia photoFILE
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர் மாயாவதி தன்னிச்சையாக அறிவித்துள்ள நிலையில், அதுபற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ், பா.ஜ. கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாகவும் பிரகாஷ் காரத்துடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி உள்ளார். இதன் மூலம் மூன்றாவது அணியை அமைப்பது தொடர்பான முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இச்சந்திப்பின்போது உடனிருந்த சீத்தாராம் யெச்சூரி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள 10 அரசியல் கட்சிக்களுடன் ஆலோசனை நடத்தியபின், இம்மாத இறுதிக்குள் மூன்றாவது அணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு விடும் என்றார்.

சமீபத்திய விவகாரங்கள் குறித்து மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு தொடர்பு கொண்டுள்ளார். இதன் பின்னர் மற்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் போன்றவை கூட்டாக வெளியிடப்படும் என்று யெச்சூரி மேலும் கூறினார்.

இடதுசாரித் தலைவர்கள், ராஷ்டிரீய லோக்தள் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்டோருடன் இவ்வார இறுதியில் மதச்சார்ப்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவகவுடா ஆலோசனை நடத்தியிருந்தார். தற்போது சந்திரபாபு நாயுடுவும் சந்தித்துப் பேசியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.