என்.எஸ்.ஜி. நிபந்தனைகள் விதித்தால் இந்தியா ஏற்காது: பிரணாப் முகர்ஜி!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (20:13 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபடுவது தொடர்பாக அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (Nuclear Suppliers Group-NSG) நிபந்தனை ஏதும் விதித்தால் அதனை இந்தியா ஏற்காது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு 2 நாள் பயணம் செல்லும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் விமானத்தில் பயணிக்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, என்.எஸ்.ஜி. நாடுகளுடன் எவ்வித நிபந்தனையுமற்ற வணிகத்தை மேற்கொள்ளவே இந்தியா விலக்கு அளிக்கக் கோரி வருகிறது. ஆனால் அதற்காக அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவதில் நிர்பந்தப்படுத்தினால் அதனை இந்தியா ஏற்காது என்று கூறினார்.
இந்தியாவிற்கு விலக்கு அளிக்கக் கோரி அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று சில நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் கூறினார். அந்த திருத்தங்கள் என்னவென்பதை அறிந்துகொண்ட பின்னரே அதனை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதைக் கூற முடியும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இந்தியாவிற்கு விலக்கு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவிற்கு விலக்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடுகளுக்கும் நமக்கும் இடையிலான முரண்பாடு மிகவும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்.எஸ்.ஜி.யின் அடுத்தக் கூட்டம் செப்டம்பர் மாதம் 4,5 தேதிகளில் நடைபெறுகிறது. அப்பொழுது இந்தியா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.