டெல்லி விமான நிலையத்தில் ரூ.9,000 கோடியில் மூன்றாவது பயணிகள் முனையம்!
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (19:05 IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நெருங்குவதை முன்னிட்டு, புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது பயணிகள் முனையம் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஓடுதளத்தைத் திறந்து வைத்துப் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் பட்டேல், ''மூன்றாவது பயணிகள் முனையம் 2010 க்குள் அமைக்கப்பட்டு விடும். இந்த முனையத்தை உள்நாட்டுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்துவதா அல்லது அயல்நாட்டுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்துவதா என்பது குறித்து விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் விவாதித்து வருகிறோம்.'' என்று தெரிவித்தார்.
புதிய முனையத்திற்கான வரைபடம் தயாரித்தல், ஓடுதள விளக்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், இந்தப் புதிய முனையம் வழியாக ஆண்டிற்கு 37 மில்லியன் பயணிகளைக் கையாளமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டிலேயே நீளமான ஓடுதளம்!
புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று திறக்கப்பட்டுள்ள ஓடுதளம், நமது நாட்டிலேயே மிக நீளமான ஓடுதளம் ஆகும். இதன் நீளம் 4.43 கிலோ மீட்டர்.
மேலும், தென் கிழக்கு ஆசியாவில் மூன்று ஓடுதளங்களைக் கொண்ட விமான நிலையங்களில் ஒன்று என்ற பெருமையையும் புது டெல்லி பெற்றுள்ளது.
இந்தப் புதிய ஓடுதளத்தின் மூலம், பரபரப்பான நேரத்தில் விமான போக்குவரத்து எண்ணிக்கை மணிக்கு 35- 40 என்பதில் இருந்து 75 ஆக உயரும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரி எம்.சி.கிஷோர் தெரிவித்தார். தற்போது நாள் ஒன்றிற்கு 700 விமானங்கள் இந்திரா காந்தி விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நெருங்குவதை முன்னிட்டு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.