ஜார்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி?
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (18:39 IST)
ஜார்கண்டில் மதுகோடா தலைமையிலான அரசிற்கு அளித்து வ்நத ஆதரவை சிபுசோரன் விலக்கிக் கொண்டதால், அங்கு ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஜார்கண்டில் சுயேட்சை உறுப்பினரான மதுகோடா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தான் முதல்வராக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால், மதுகோடாவிற்கு அளித்து வந்த ஆதரவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபுசோரன் விலக்கிக் கொண்டார். அதனால் மதுகோடா தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.
இதையடுத்து முதல்வர் மதுகோடாவிற்கு ஆளுநர் சையது கிப்தே அழைப்பு அனுப்பி இருக்கிறார். அப்போது மதுகோடாவிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 82 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டப் பேரவையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.க. விற்கு 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதற்கிடையில் சுயேட்சைகள், மற்ற சிறு கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பும் சிபுசோரனின் முயற்சி பலனளிக்காது என்று கருதப்படுகிறது. பா.ஜ.க.வும் ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை என்பதால், ஜார்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.