ஜம்மு- காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்!
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (13:36 IST)
சரியாகச் சிந்திக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜம்மு- காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த உழைக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று, மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர் சி. ரங்கராஜன், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், " ஜம்மு- காஷ்மீரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்த எல்லா அரசியல் கட்சிகளும், சரியாகச் சிந்திக்கும் மக்களும் சேர்ந்து உழைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜம்மு- காஷ்மீரில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதா என்று கேட்டதற்கு, "நிலைமையைக் கட்டுப்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும். இது பிரிவினைப் பிரச்சனை அல்ல என்பதைப் புரிந்துகொண்டு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அவர்.
பிரிவினைவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சோனாவர் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ள சூழலில் பிரதமரின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது.
முன்னதாகத் தனது சுதந்திரதின உரையிலும், மக்களைப் பிரிக்க மதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.