சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் விரிவாக்கம்!
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:08 IST)
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை ரூ.3,750 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை விமான நிலையம் ரூ.1,808 கோடியிலும், கொல்கத்தா விமான நிலையம் ரூ.1,942.51 கோடியிலும் விரிவாக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொள்ளவுள்ள இந்தத் திட்டத்திற்கு, பிரதமர் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
விரிவாக்கப்பட்ட பிறகும் இந்த இரண்டு விமான நிலையங்களும் இந்திய விமான நிலைய ஆணைத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், விரிவாக்கப் பணிகள் செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்தார்.
சென்னை விமான நிலைய விரிவாக்க, நவீனமயமாக்கல் பணிகள் 26 மாதங்களில் முடிவடையும் என்றும், கொல்கத்தா விமான நிலையப் பணிகள் 30 மாதங்களில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்த அமைச்சர், சர்வதேசத் தரத்திற்கு பிற நாட்டு விமான நிலையங்களுடன் போட்டியிடும் அளவிற்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அடுத்த 20 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கப் பணிகள் முடிவடையும்போது, டெல்லி, மும்பை விமான நிலையங்களுக்கு இணையாக இந்த இரண்டு விமான நிலையங்களும் திகழும் என்றார் அவர்.
விரிவாக்கப்படும் திட்டத்தின் கீழ், உள்நாட்டு, அயல்நாட்டு முனையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்படும். இரண்டாவது ஓடுதளம் விரிவுபடுத்தப்படும்.
சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளம் 832 மீட்டர்கள் விரிவுபடுத்தப்படும். இதனால் அதன் ஒட்டுமொத்த நீளம் 2,917 மீட்டர்களாக அதிகரிக்கும்.