அமர்நாத்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை!
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (19:43 IST)
அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் நடந்து வரும் வன்முறைகள் தொடர்பாக புது டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முந்தைய கூட்டத்தைப் போலவே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் அப்துல் அஜிஸ் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது.
இந்தக் கூட்டத்திலும் முந்தைய கூட்டத்தைப் போலவே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று தெரிகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் பேசியதால் கூட்டத்தில் குழப்பம் நிலவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூரியத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவராஜ் பாட்டீல், "ஜம்மு- காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள முஷாஃபராபாத் சந்தையில் நாம் வர்த்தகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ள நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் செல்வதை அனுமதிக்க முடியாது. நிலைமையை ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் அரசின் முக்கியக் கடமை" என்று கடுமையாகத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆஷாத், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் மனமோகன் சிங் தலைமையில் நாளை நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முன்னோட்டக் கூட்டமாகவே இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.