'வாக்கிற்கு லஞ்சம்' விவகாரம்: சமாஜ்வாடி எம்.பி.க்கு சம்மன்!
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (16:46 IST)
ஜூலை 22இல் மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்குச் சாதகமாக வாக்களிக்கக் கோரி லஞ்சம் தரப்பட்டதாக எழுப்பப்பட்ட புகாரை விசாரித்து வரும் நாடாளுமன்றக் குழு, சமாஜ்வாடி கட்சி எம்.பி. ரியோட்டி ராமன் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு வருகிற 18 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசைக் காப்பாற்றக் கோரி தங்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றம்சாற்றியுள்ள பா.ஜ.க. எம்.பி.க்கள் மூவரும், தாங்கள் அளித்துள்ள புகாரில் ரியோட்டி ராமன் சிங் எம்.பி.யின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து லஞ்சப் புகாரை விசாரித்து வரும், ஏழு பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கிஷோர் சந்திர தியோ கூறுகையில், "அலகாபாத் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரியோட்டி ராமன் சிங்குடன், பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திரா குல்கர்னி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங்குடன் பணியாற்றிய சஞ்சீவ் சக்சேனா, சோஹல் என்ற ராஜா ஹிந்துஸ்தானி ஆகிய மூவரும் நாடாளுமன்றக் குழுவின் முன்பு வருகிற 18 ஆம் தேதி ஆஜராக வேண்டும்" என்றார்.
முன்னதாக, புகார் அளித்துள்ள பா.ஜ.க. எம்.பி.க்களில் அஷோக் அர்கால், பாகன் சிங் குலாஸ்ட் ஆகிய இருவரும் ஏற்கெனவே விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகிவிட்டனர். மற்றொரு எம்.பி.யான மகாவீர் பகோரா உடல்நலக் குறைவினால் ஆஜராகவில்லை. அவரிடம் நலம் விசாரித்துள்ள விசாரணைக் குழு, அவரது வாக்குமூலத்தையும் ஆதாரமாகப் பதிவு செய்தது.
பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படும் காட்சியைப் பதிவு செய்துள்ள சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய், இன்று விசாரணைக் குழுவின் முன்பு ஆஜரானார்.
அப்போது அவர் மேலும் இரண்டு கேசட்டுகளைக் கொடுத்ததாகத் தெரிவித்த கிஷார் சந்திர தியோ, விசாரணையில் ராஜ்தீப் சர்தேசாய் என்ன கூறினார் என்பதைத் தெரிவிக்கவில்லை.