நா‌ன் ‌பிரதம‌ர் ஆவதை‌த் தடு‌க்க முடியாது: மாயாவ‌தி!

சனி, 9 ஆகஸ்ட் 2008 (16:35 IST)
'நான் பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது' என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.

ல‌க்னோ‌வி‌ல் நட‌ந்த பகுஜன் சமாஜ் கட்சி கூட்ட‌த்‌தி‌‌ல் பே‌சிய மாயாவ‌தி, "உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக 4 முறை நான் பதவி ஏற்றிருக்கிறேன். அப்படி இருக்கும்போது, என்னால் பிரதமராக முடியாதா? எல்லா ஜாதியினரும் பகுஜ‌ன் சமாஜ் கட்சியை ஆதரித்தால், நான் பிரதமர் ஆவதை யாரும் தடுக்க முடியாது" எ‌ன்றா‌ர்.

"தலித் குடும்பத்தில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். ஏழைகள், தலித்துகளின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து நான் பாடுபடுவேன். ஜாதிய சக்திகளான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் ஆவதைத் தடுத்துவிட்டனர்" எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

"கட்சித் தொண்டர்கள் என் பிறந்த நாள் பரிசாக கோடிக்கணக்கான ரூபாயை கொடுத்துள்ளனர்.அந்த தொகையில் 30 சதவீதத்தை வருமான வரியாக நான் செலுத்தியிருக்கிறேன். இவையெல்லாம் என் கட்சியினருக்குத் தெரியும். அதனால் காங்கிரஸ் கட்சி இதை ஒரு பிரச்னையாக எழுப்புவதைக் கண்டு நான் கவலைப்படவில்லை" எ‌ன்றா‌ர் மாயாவ‌தி.

மேலு‌ம், "வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்தாக என் மீது குற்றம் சுமத்தி மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்பாக என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்கிறது.எனக்கு ஏராளமான சொத்து இருப்பதாக பத்திரிகைகள் மூலமாக பொய்யான செய்தியை காங்கிரஸ் பரப்பி வருகிறது." எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

வறுமையை ஒழிக்கப் போவதாக பிரசாரம் செய்யு‌ம் காங்கிரஸ் கட்சி, உ‌ரிய நடவடி‌க்கைக‌‌ள் எதையு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை.தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்குத்தான் காங்கிரஸ் உதவுகிறது. வறுமையை ஒழிக்கப் போவதாக முன்பு இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் பிரசாரம் செய்தனர். இப்போது ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். வறுமையை ஒழிக்க அணு சக்தி ஒப்பந்தம் உதவும் என்று அவர் மக்களவையில் பேசியுள்ளார். ஆனால் அது காங்கிரஸின் தவறான பிரசாரம்" என்றார் மாயாவதி.

வெப்துனியாவைப் படிக்கவும்