அமர்நாத் பிரச்சனை தீர்க்க நால்வர் குழு: வோரா நியமித்தார்!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (11:58 IST)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட உத்தரவு ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 4 உறுப்பினர் கொண்ட குழுவை அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா நியமித்துள்ளார்.

இப்பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கலவரத்தில் ஈடுபடும் அமைப்புகள் அமைதி காத்தால் தான் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அனைத்துக் கட்சியினரும் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி அமைப்பிடம் பேச்சு நடத்த 4 பேர் கொண்ட குழுவை ஆளுநர் வோரா நியமித்தார்.

இக்குழுவில், அம்மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.எஸ்.பலோரியா, ஜம்மு பல்கலைத் துணைவேந்தர் அமிதாப் மட்டோ, அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.டி.ஷர்மா மற்றும் அமர்நாத் கோயில் வாரியத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பி.பி.வியாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் ஷர்மா, அமர்நாத் கோயிலுக்கு சம்பந்தப்பட்ட வனநிலத்தை ஏன் வழங்கக் கூடாது என்ற காரணத்தை தங்களுக்கு அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்