சிமெண்ட் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை!

வெள்ளி, 25 ஜூலை 2008 (18:46 IST)
நாட்டில் சிமெண்ட் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், விலை உயராமல் தடுக்கவும் பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. த‌ற்போது இதனை மேலு‌ம் அ‌திக‌ரி‌க்க நடவடி‌க்கை எடு‌‌க்க‌ப்ப‌ட்டு வரு‌‌கிறது.

நாள் ஒன்றுக்கு 2 சரக்கு‌ப் பெட்டகங்களில் தற்போது சிமெண்ட் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது. அட்டாரி எல்லை வழியாக ரயில் மூலம் இது இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டின் தேவையைப் பொருத்து, நாள் ஒன்றுக்கு 3 பெட்டகங்களில் கிடைப்பதற்கு தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ரயில்களில் வரும் சிமெண்டை இறக்கி வைக்கவும், குடோனில் பாதுகாக்கவும் அமிர்தசரஸ் நகரில் எல்லா வசதிகளையும் ரயில்வே செய்துள்ளது. 24 மணி நேரமும் சரக்குகளை இறக்க போதிய ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அமிர்தசரசில் இருந்து சிமெண்ட்டை எடுத்துச் செல்ல ஏதுவாக சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 4 சக்கரங்கள் கொண்ட சரக்கு பெட்டகங்கள் மூலமாகவே பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் அனுப்பப்படுகிறது. இதை 8 சக்கரங்கள் கொண்ட பெட்டகங்களில் அனுப்பினால் நேரம் மிச்சமாகும் என சமீபத்தில் தில்லியில் நடந்த இருதரப்பு ரயில்வே உயர்நிலைக் கூட்டத்தின் போது பாகிஸ்தான் தரப்பு ரயில்வே அதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் 45,000 டன்னும் மே, ஜூன் மாதங்களில் தலா 64,000 டன்னும் ரயில் மூலமாக சிமெண்ட் இறக்குமதி நடந்துள்ளது. தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்