வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி திட்டம்: விவரம் வெளியீடு!

வெள்ளி, 25 ஜூலை 2008 (15:25 IST)
தீவிரவாத தாக்குதல்கள், இன மோதல்களில் பலியானவர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்ட‌ம் குறித்த மற்ற விவரங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல்கள், இன மோதல்களில் பலியானவர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் வழங்கியது. இத்திட்டம் குறித்த மற்ற விவரங்களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, தீவிரவாத தாக்குதல்கள், இனமோதல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் பலியானவர் அல்லது நிரந்தர பாதிப்பு அடைந்தவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் இத்தொகை டெபாசிட் செய்யப்படும். 3 ஆண்டுகளுக்கு இந்தப் பணத்தை எடுக்க முடியாது. குடும்பத்தில் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், மூத்த குழந்தை உ‌ரிய வயதை அடையு‌ம் வரையில் எடுக்க முடியாது. இதில் எது அதிகமோ, அந்த வழிமுறை பின்பற்றப்படும். 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டு வங்கிக் கணக்கிலேயே சேர்க்கப்படும்.

மாநில அரசுகளின் உதவித் தொகை, கருணைத் தொகை என வேறு எந்த நிதியுதவி பெற்றிருப்பவர்கள்கூட இந்த நிதியுதவியைப் பெற முடியும். இதே போன்ற மத்திய அரசின் உதவியைப் பெறுபவர்கள் மட்டும் பயனடைய முடியாது.

தாக்குதல்களில் நிரந்தர பாதிப்பு அடைந்தவர்களுக்கும் பலியானவர், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக சுகாதார அட்டை வழங்கப்படும். வன்முறையால் அடைந்த பாதிப்புகள், காயங்களுக்கு இந்த அட்டையை பயன்படுத்தி இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ராஷ்டிரீய ஆரோக்கிய நிதி, தேசிய சிகிச்சை திட்டம் ஆகியவற்றின் மூலமாகவும் சிகிச்சைகள் வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட மருத்துவ அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள்- மகளிர் மேம்பாட்டு அலுவலர், மாநில அரசால் நியமிக்கப்படும் அலுவலர் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான குழுவை அமைக்க வேண்டும்.

தகுதி அடிப்படையில் பயனாளிகளை இந்த குழு தேர்ந்தெடுக்கும். உதவி கேட்டு மனுக்கள் கிடைத்த ஒரு மாதத்தில் இந்தக் குழு பரிந்துரை செய்தால் தகுதியானவர்களுக்கு உதவிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வழங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்