தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!

புதன், 23 ஜூலை 2008 (18:46 IST)
தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிக‌ளி‌ல் ஈடுபடு‌ம் தொழிலாளர்களுக்கு முறையாகவும், உடனுக்குடனும் ஊதியம் கிடைப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அஞ்சல் துறை சார்பில் விரைவில் செயல்படுத்தப்பட உ‌ள்ளது.

நாடு முழுவதும் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் நடக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

திட்டத்தின் பயனாளிகள் பெயரில் 1.10 கோடி கணக்குகள் அஞ்சல் துறையில் தொடங்கப்பட்டு இதன் மூலமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன் முதல் கட்டமாக, பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக உத்தரப்பிரதேசம், குஜராத், ஒரிசா மாநில அரசுகளுடன் அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, எலக்ட்ரானிக் முறையில் ஊதியம் வழங்க பி.எஸ்.என்.எல்., தேசிய தகவல் மையத்துடன் (என்.ஐ.ி.) இணைந்து செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது ஊதியத்தை பெறுவதற்காக அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்க வேண்டும். பயனாளிகள் வேலை பார்த்த நாட்கள், அவர்கள் செய்த வேலையின் அளவு ஆகிய விவரங்கள் எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்படும்.

இதன் அடிப்படையில் ஊதியம் கணக்கிடப்பட்டு அவர்களது அஞ்சலகக் கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா பணிகளும் எலக்ட்ரானிக் முறையில் நடப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் கிடையாது.

கணக்கு தொடங்கப்படும்போதே, ஒவ்வொரு பயனாளிக்கும் புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த அட்டையை காட்டியே ஒவ்வொரு முறையும் சம்பளம் பெற முடியும். தங்கள் அஞ்சலக கணக்கு தொடர்பான மற்ற விவரங்களைப் பெறவும் பயனாளிகளுக்கு இந்த அட்டை பயன்படும். எலக்ட்ரானிக் பாஸ் புத்தகமாகவும் இந்த அட்டை பயன்படும்.

பணம் போடப்படுவது, எடுப்பது உள்பட அனைத்து தகவல்களும் தானாகவே இதில் பதிவாகிவிடும். புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதால் பயனாளியைத் தவிர வேறு யாரும் இந்த அட்டையைப் பயன்படுத்த முடியாது.

சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை ஒரிசா மாநிலத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்