கட்சியிலிருந்து சோம்நாத் நீக்கப்பட்டார்!

புதன், 23 ஜூலை 2008 (17:47 IST)
மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சியின் தலைமை விடுத்த உத்தரவை ஏற்க மறுத்ததையடுத்து, சோம்நாத் சாட்டர்ஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அளித்தவந்த ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில், மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு சோம்நாத் சாட்டர்ஜிக்கு மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைமை கட்டளையிட்டதாக செய்திகள் கூறின.

ஆனால் அதனை மார்க்ஸிஸ்ட் கட்சி உறுதி செய்யவில்லை. பதவி விலகும் முடிவை அவரிடமே விட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியிருந்தார்.

மக்களவையில் கடந்த இரண்டு நாட்களாக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிக்கை அரசிற்கு சாதகமானதாகவே இருந்ததென குற்றம்சாற்றப்பட்டது.
இந்த நிலையில், சோம்நாத் சாட்டர்ஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியின் கட்டளையை அவர் ஏற்காத்தால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் மார்க்ஸிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 19, பிரிவு 13இன் படி, கட்சிக்கட்டுப்பாட்டை சோம்நாத் மீறியுள்ளதாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு முடிவு செய்து அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதென அதன் உறுப்பினர்களில் ஒருவரான பீமன் போஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்