'இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்': பிரதமர்!
செவ்வாய், 22 ஜூலை 2008 (22:26 IST)
"இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் நான் அவர்களின் கொத்தடிமை போல செயல்பட வேண்டும் என்று இடதுசாரிகள் விரும்பினர்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில், "இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) வுடனும் பேச்சு நடத்துவதற்கு எங்களை அனுமதியுங்கள், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்று இடதுசாரிகளிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். அயலுறவுக் கொள்கை சார்ந்த இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயலும் எந்தவொரு அரசும் விடுப்பது போன்ற இந்த சாதாரணமான வேண்டுகோளிற்கு இடதுசாரிகள் அனுமதியளிக்கவில்லை.
பதிலாக, அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாங்கள் மேற்கொள்ளும் பேச்சுக்களின் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று இடதுசாரிகள் விரும்பினர். என்னை அவர்களின் கொத்தடிமையைப் போலச் செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
அணு சக்தி ஒப்பந்தம் பற்றிக் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தில் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். இருந்தாலும், நமது சுதந்திரமான அயலுறவுக் கொள்கைகளைத் தியாகம் செய்யாமல் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளை மேம்படுத்திக்கொள்வது அவசியத் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானியின் குற்றச்சாற்றுக்களை கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் "எல்.கே.அத்வானி என் மீது பல்வேறு குற்றச்சாற்றுக்களைக்
கூறியுள்ளார். அவை எல்லாவற்றுக்கும் பதிலளித்து அவையின் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எல்.கே.அத்வானி தனது கருத்துக்கள் சிலவற்றை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்த விவாதத்திற்குள் மக்களவை தேவையற்று இழுத்து வரப்பட்டுள்ளது. எனினும் சில தேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில பணிகளில் இருந்து எங்கள் கவனம் திருப்பப்படக் கூடாது என்பதே எனது நோக்கமாகும்." என்று கூறியுள்ள பிரதமர்,
1. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அதிகரித்து வரும் வேலைவாய்ப்பையும் பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது.
2. விவசாயத்தை புணரமைப்பது. இத்துறையில் முதலீட்டையும் வளங்களையும் பெருக்கி வளர்ச்சியை ஏற்படுத்துவது. உணவு தானிய உற்பத்தி 231 மில்லியன் டன்களாக அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில், மேலும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இரண்டு மடங்காக்குவது.
3. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவது.
4. கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், தரமான உயர்கல்வி கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் திட்டங்களை வகுப்பது.
5. கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் தேசிய அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவது.
6. பழங்குடியினருக்கான நில உரிமை, சிறுபான்மையினருக்கான புதிய 15 அம்சத் திட்டம் குறித்துச் செயல்படுவது.
என்பன உள்ளிட்ட 9 பணிகளில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாகப் பட்டியலிட்டுள்ளார்.