நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!

செவ்வாய், 22 ஜூலை 2008 (20:48 IST)
தனது தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது!

நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நேற்று காலை முதல் இன்று மாலை 7.20 மணி வரை நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க எழுந்தபோது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார்.

இதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரன் மூலம் வாக்களிக்கப்பட்டது. 487 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் அரசிற்கு ஆதரவாக 253 உறுப்பினர்களம், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதன்பிறகு வாக்குச் சீட்டில் வாக்களித்த உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி முடிவை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

நம்பிக்கை தீர்மானத்திற்கு (அரசிற்கு) ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவானதாக கூறிவிட்டு, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை முடிக்கப்பட்டது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முனைப்பாக செயல்பட்டதையடுத்து, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதில் முடிந்துவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுத்துவது உறுதியாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்