முல்லைப்பெரியாறு வழக்கு: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:31 IST)
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில் இரு மாநிலங்களின் சார்பாக அளிக்கப்படும் சாட்சியத்தை பதிவு செய்து அறிக்கை அளிக்க இராஜஸ்தான் மாநில முன்னாள் தலைமை நீதீபதி அனில் தேவ் சிங்கை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
முல்லைப்பெரியாறு அணை அதன் முழு அளவான 156 அடிக்கு நீர் தேக்கும் அளவிற்கு உறுதியாக உள்ளதென்று கூறி, அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள கேரள அரசிற்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு தமிழ்நாடு உயர்த்திக்கொள்ள கேரள அரசு அனுமதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை முடக்கும் வகையில் தனது நீர்ப்பாசன சட்டத்தினைத் திருத்தி ஒரு அவசர சட்டத்தை கேரள அரசு பிறப்பித்தது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக் கருதி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கில்லை என்று அறிவித்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த தமிழக அரசு, கேரள அரசின் அவசரச் சட்டம் அரசமைப்பிற்கு முரணானது என்றும், அதனை நிராகரிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது அதனை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கர், டி.கே. ஜெயின் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, இரு மாநிலங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களின் ஒப்பதலோடு இராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அனில் தேவ் சிங்கை இரு மாநிலங்களின் சாட்சியத்தை பதிவு செய்து அதன் அடிப்படையில் அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நீதிபதி அனில் தேவ் சிங் தனது அறிக்கையை செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் நீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணை அதே மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இவ்வழக்குத் தொடர்பாக கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில்களை அளிக்குமாறு நீதிபதி அனில் தேவ் சிங்கிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:
1. முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை கேரள அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் அரசமைப்பிற்கு எதிரானதா? அணையின் நீர்மட்டத்தை உயர்த்த இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் தமிழ்நாடு பெற்ற உரிமையை அந்த அவசரச் சட்டம் பறிக்கிறதா?
2. பெரியாறு அணையின் பாதுகாப்பு, சூற்றுச் சூழல் இயற்கையின் மீது அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள நிலை, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா?
3. இவ்வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்க்ப்பட்ட கேரள அரசின் நிலைப்பாட்டை மீண்டும் வழக்காட்டிற்கு உட்படுத்த அனுமதிக்கலாமா?
4. தமிழ்நாட்டின் சார்பாக இந்திய அரசின் செயலருக்கும், திருவிதாங்கூர் மஹாராஜாவிற்கும் இடையே 1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி கையெழுத்தான குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான உரிமைகளின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதா? இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு இந்த குத்தகை ஒப்பந்தம் முரண்பட்டதா?
5. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 299இன் படி, கேரளமும், தமிழகமும் 1970ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி செய்துகொண்ட ஒப்பந்தம் சரியானதா?
6. முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே ஒரு புதிய அணை கட்டவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நியாயமானதுதானா? இதனால் சுற்றுச் சூழல், உயிரி பரவல், தாவரம், விலங்கின பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அது முரண்பட்டதா?
ஆகியவற்றை தெளிவுபடுத்தி, மேற்கண்ட கேள்விகளுக்கு இரு தரப்பின் பதில்களைப் பதிவு செய்து அதன் அடிப்படையில் தனது அறிக்கை தயாரித்து அதனை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அனில் தேவ் சிங் தாக்கல் செய்வார்.