ஐ.மு.கூட்டணி அரசு ஐ.‌சி. வார்டில் இருக்கும் நோயாளி: அ‌த்வா‌னி!

திங்கள், 21 ஜூலை 2008 (13:46 IST)
ஐ.மு.கூட்டணி அரசு ஐ.‌சி. வார்டில் இருக்கும் நோயாளி என எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்ததால் மக்களவையில் இன்று துவங்கிய சிறப்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை இன்று துவங்கியது‌ம் மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் மீது ‘அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இதையடுத்து பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, இடதுசாரிகளுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அணு சக்தி ஒப்பந்தத்தைத் பொறுத்தவரை இரு கட்சிகளும் ஒரே நிலையைக் கொண்டுள்ளதாக கூறினார்.

ஐ.மு. கூட்டணி அரசு தற்போது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளி போன்ற நிலையில் உள்ளதை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

இத‌ற்கு காங்கிரஸ் உறுப்பினர்க‌ள் பலத்த எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்தன‌ர். இதனா‌ல் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை‌த் தலைவ‌ர் சோம்நாத் சாட்டர்ஜி தலையிட்டு அமைதிப்படுத்தினார். பின்னர் அத்வானி மீண்டும் விவாதத்தை தொடர்ந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்