மக்களவை இன்று கூடு‌கிறது!

திங்கள், 21 ஜூலை 2008 (13:27 IST)
பரபரப்பான சூழ்நிலையி‌ல் ம‌க்களவை‌யி‌ல் இருநாள் சிறப்புக் கூட்டத் தொடர் இ‌ன்று தொடங்குகிறது. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் முதல்நாள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்நாள் கூட்டம் தொடங்கியதும் 7 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். அதன்பிறகு கடந்த கூட்டத் தொடருக்குப் பின்னர் மறைந்த 5 முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

அதையடுத்து உடனடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும். கேள்வி நேரம் எதுவும் இல்லை.

"அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை கொண்டிருக்கிறது' என்ற ஒற்றை வரியைக் கொண்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்யும் பிரதமர், அதன் மீதான விவாதத்தையும் தொடங்கி வைத்துப் பேசுவார்.

நான்கரை ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்குவதுடன் அணுசக்தி ஒப்பந்தத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

இருநாள்கள் நடக்கும் விவாதத்தின் முடிவில் நாளை நம்பிக்கைத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடக்கும். வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரதமரின் பதிலுரை இடம்பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்