பரதனுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!
சனி, 19 ஜூலை 2008 (17:48 IST)
வரும் 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதனைச் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
ஏ.பி. பரதனுடனான 40 நிமிடசந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க இருக்கிறோம்.
இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். அணு சக்தி ஒப்பந்தத்தில் அரசுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பாக ஆதரவை திரட்டுவது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்தோம். அணு சக்தி ஒப்பந்தத்தை தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது.” என்று கூறினார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜாவும் உடனிருந்தார்.
எந்தெந்தக் கட்சிகளுடன் எல்லாம் தெலுங்கு தேசம் தொடர்பு கொண்டு வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுடனும் தொடர்ந்து பேசிவருவதாக கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியை பிரதமர் பதவி வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதற்கு, தற்போதைய பிரச்சினை அரசுக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமே, பிரதமர் வேட்பாளர் பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்றார்.
டி. ராஜா கூறுகையில், தற்போதைய அரசியல் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவில் உள்ளோம் என்றார்.
இது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியையும், சந்திரபாபு நாயுடு சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.