22ஆம் தேதிக்கு முன் அமைச்சரவை மாற்றமில்லை-காங்.

சனி, 19 ஜூலை 2008 (13:34 IST)
நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் தினமான 22ஆம் தேதிக்கு முன் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களின் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

நாடாளுமன்றத்தில் அரசை ஆதரிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திநிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அரசுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது குறித்தும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்தும் பேசப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் உயர் தலைவர்கள் சிலர், மத்திய அமைச்சரவையில் மாற்றம் என வெளியான தகவலை மறுத்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.

மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி) கட்சிகள் அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கோரியிருப்பதால், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஜேஎம்எம் கட்சிக்கு 5 எம்.பிக்களும், ஆர்எல்டி-க்கு 3 எம்.பிக்களும் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்