நெல்சன் மண்டேலா பிறந்தநாள்: குடியரசு தலைவர் வாழ்த்து!
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:18 IST)
கறுப்பினப் போராளி தென் ஆஃப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவருக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்.
உலகளவில் சுதந்திரத்தின் சின்னமாகக் கருதப்படும் நெல்சன் மண்டேலா ஜூலை 18, 1918 இல் பிறந்தார்.
வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்திற்குகாக தனது வாழ்வை அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா, 1940 களில் போர்ட் ஹேர் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது படிப்பு முடிவடையும் முன்னரே வெளியேறினார்.
பின்னர் சக போராளிகளான ஆலிவர் டாம்போ, வால்டேர் சிஸ்சுலு மண்டேலா ஆகியோருடன் இணைந்து ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் லீக்-கை உருவாக்கினார்.1961 களில் வலுப்பெற்ற இவ்வமைப்புத்தான் முதன்முதலில் நிறவெறிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.
வெள்ளையர்களின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலாவிற்கு 1964 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தென் ஆஃப்ரிக்காவின் கடைசி வெள்ளை அதிபர் எஃப் டபிள்யூ டி கிளார்க், ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களின் மீதான தடைகளை நீக்கியதை அடுத்து, பிப்ரவரி 11, 1990 இல் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
ஒரு ஆண்டிற்குப் பிறகு ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரசின் தலைவராகவும், 1994 ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்காவின் முதல் கறுப்பு அதிபராகவும் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1999 இல் உலகத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாட்டை வலுப்படுத்த இளம் தலைமுறைக்கு வழிவிட்டு மண்டேலா பதவிவிலகினார்.