தேவேகவுடாவின் ஆதரவைக் கோரினார் பிரதமர்

நாடாளுமன்றத்தின் தமது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசை ஆதரித்து வாக்களிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 3 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் 22ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதற்கிடையே இன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் தேவேகவுடாவுன் பேசினார்.

22ம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அப்போது அவர் கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும் இந்த தொலைபேசி உரையாடல் குறித்து காங்கிரஸ் கட்சியோ அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளமோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆதரிப்பதற்காக பிரதமர், பேசியதாக மட்டுமே இரு கட்சிகளும் கூறியுள்ளன.

தேவேகவுடா உட்பட 3 மக்களவை உறுப்பினர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு உள்ள நிலையில், அக்கட்சி இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை.

பெங்களூருவில் இதுதொடர்பாக அக்கட்சியின் முக்கியக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை ஆதரிப்பது பற்றிய இறுதி முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்