சமாஜ்வாடி எம்.பி.க்களில் பிளவில்லை: முலாயம் சிங்!
வியாழன், 17 ஜூலை 2008 (13:57 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் மத்திய அரசிற்கு ஆதரவு அளிப்பதை எந்தவொரு சமாஜ்வாடி எம்.பியும் எதிர்க்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
கட்சியின் முடிவை ஒரு எம்.பி.கூட மீற மாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்த முலாயம், அதிருப்தி எம்.பி.க்கள் பலரும் மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர் என்று குறிப்பிட்டார்.
"கட்சியின் முடிவை ஒரு எம்.பி.கூட மீற மாட்டார். முனவார் ஹசன், ஜெய் பிரகாஷ் ராவத் போன்ற அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் எம்.பி.க்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியை விட்டு வெளியேறி விட்டனர்" என்றார் அவர்.
அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் மற்றொரு சமாஜ்வாடி எம்.பியான ராஜ்நாராயணன் புதோலியா, நீண்ட காலத்திற்கு முன்பே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்று முலாயம் சிங் கூறினார்.
மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக முனவார் ஹசனுக்கு ரூ.25 கோடி தருவதற்கு சமாஜ்வாடி முயற்சித்தது என்று வெளியான தகவல்கள் பற்றிக் கேட்டதற்கு, அது உண்மையல்ல என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் சமாஜ்வாடி கட்சிக்கு இல்லை என்றும் முலாயம் சிங் கூறினார்.
எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாகத் தன்னிடம் உள்ள விவரங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் வெளியிட வேண்டும் என்றும், அதன்மூலம் முறைகேடான எம்.பி.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விடாமல் செய்ய வேண்டும் என்றும் முலாயம் வலியுறுத்தினார்.