சோம்நாத் முடிவு நியாயமானதே: யெச்சூரி திடீர் ஆதரவு!

புதன், 16 ஜூலை 2008 (13:02 IST)
சபாநாயகர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே பதவி விலகுவது குறித்து முடிவெடுப்பேன் என சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளது நியாயமானது தான் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர‌சிய‌ல் தலைமை‌க் குழு உறு‌ப்‌பின‌ர் சீதாராம் யெச்சூரி, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவை வாபஸ் பெறும் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரை சேர்த்தது மிகப் பெரும் தவறு எனக் குறிப்பிட்டார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திரும்பப் பெற்றன.

இதையடுத்து மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கம்யூ‌னி‌ஸ்‌ட் கட்சி உறுப்பினரான சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும், தனது சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற வாதம் எழுந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சாட்டர்ஜி, சபாநாயகர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே பதவி விலகுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டேன் என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்