பிரதமர் அலுவலகம் கார்பரேட் நிறுவனங்களின் சமரச மையம் அல்ல: மார்க்சிஸ்ட்!
செவ்வாய், 15 ஜூலை 2008 (17:57 IST)
நமது நாட்டின் பிரதமர் அலுவலகம் கார்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான சுயநலப் பிரச்சனைகளைத் தீர்க்கும் சமரச அலுவலகமாக மாறிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கையில், "நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் ஐ.மு.கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதாகவிருந்தாலும், சுயநலத்திற்காகச் சண்டையிடும் கார்பரேட் நிறுவனங்களிடையில் சமரசம் ஏற்படுத்தும் அலுவலகமாக பிரதமர் அலுவலகம் மாறிவிடக் கூடாது" என்று கூறியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசியுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களுடைய நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசியல்வாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கார்பரேட் நிறுவனங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்காதா என்று தேடி வருவதாக குற்றம்சாற்றியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, "அம்பானி சகோதரர்களிடையில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு சமரசம் செய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டால் அது அபாயகரமான முன் உதாரணமாகி விடும் என்று எச்சரித்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் வலியுறுத்தியுள்ளதன் எதிரொலியாக, பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்ததாக கருதப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் அமர்சிங், பிரதமரிடம் அம்பானி சகோதரர்களின் பிரச்சனையை சமரசம் செய்ய உதவுமாறு வேண்டியதாகவும் கூறப்படுகிறது.