மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை: பா.ம.க. வலியுறுத்தல்!
திங்கள், 14 ஜூலை 2008 (20:01 IST)
சிறிலங்கா கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி பா.ம.க கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், பா.ம.க.வின் நாடாளுமன்றத் தலைவருமான புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சிறிலங்கா கடற்படையினர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மீனவர்களிடம் அத்துமீறியுள்ளதையும், வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளதையும் தனது கடிதத்தில் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவது குறித்து சிறிலங்கா தூதரிடம் மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் இந்திய கடற்படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.