அரசு, தனியார் கட்டடங்களில் அக்.2 முதல் புகைபிடிக்கத் தடை!
வெள்ளி, 11 ஜூலை 2008 (16:25 IST)
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், வரும் அக்.2ம் தேதி முதல் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது :
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி முதல் அரசு, தனியார் கட்டடங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.
கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளிலும் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட உள்ளதாகவும், இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்புமணி எச்சரித்தார்.
புகைப்பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் அபாயங்கள் குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்புமணி, புகைப்பிடிக்க தடை செய்வதற்கான உத்தரவை அமல்படுத்த, தேசிய புகையிலை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்.
அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், அரசின் தடையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அந்நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் அதேவேளையில் இந்தியாவில் அதுபோன்ற தடை எதுவும் விதிக்கப்படாததால், புகைப்பவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாகவும் அன்புமணி சுட்டிக்காட்டினார்.