பீகாரில் மாவோயிஸ்ட் போராட்டம்: தண்டவாளம் தகர்ப்பு!
வெள்ளி, 11 ஜூலை 2008 (11:55 IST)
பீகாரில் மாவோயிஸ்டுகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின் போது ரயில் தண்டவாளங்களும், அரசு அலுவலகக் கட்டடங்களும் குண்டு வீசித் தகர்க்கப்பட்டுள்ளன.
பீகாரில் கடந்த 6 ஆம் தேதி மாவோயிஸ்ட் தலைவர் கமலேஷ் என்ற தீபக் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஜமுய், முங்கேர், பாகல்பூர், லக்கிசராய், பன்கா ஆகிய 5 மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஜமுய் மாவட்டத்தில் உள்ள நர்கஞ்சோ மற்றும் கோர்ப்பரான் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் தண்டவாளத்தை இன்று அதிகாலை 1 மணியளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெடி வைத்துத் தகர்த்துள்ளனர்.
இதனால் கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட பாட்னா- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஹவுரா- டெல்லி, கோரக்பூர்- ஹாட்டியா உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் காவலர்களும், ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்தனர்.
மேலும் முங்கேர் மாவட்டத்தில் ஜமல்பூர் பிரிவுக்கு உட்பட்ட கோகி- பரியார்பூர் கிராமம் மார்க்கத்திலும் ரயில் தண்டவாளங்கள் மாவோயிஸ்டுகளால் நள்ளிரவில் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பட இடத்தில் வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
தண்டவாளங்கள் தகர்க்கப்பட்ட அதே நேரத்தில், ஜமுய் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகக் கட்டடம், உள்ளூர் காவல்நிலையக் கட்டடம் ஆகியவற்றின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், அவை பகுதி சேதமடைந்தன.
இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.