1992 கலவர வழக்கு: 3 சிவ சேனாவினருக்கு சிறை!
புதன், 9 ஜூலை 2008 (21:09 IST)
1992- இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கில் சிவ சேனா தலைவர்கள் மதுக்கர் சர்ப்போட்டார், அசோக் ஷிண்டே, ஜெயந்த் பிரதாப் ஆகிய மூவருக்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ.5,000 அபராதமும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த பெருநகரக் குற்றவியல் நீதிபதி ஆர்.சி. பபட் சர்க்கார், குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகள் ரூ.5,000 பிணையத் தொகை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பிணையத் தொகையைக் கட்டுவதற்கு ஜூலை 24 ஆம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குற்றவாளிகளுக்கு எதிராக சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
1992, டிசம்பர் 27 அன்று சிவ சேனா தொண்டர்கள் மத்தியில் கூடிய சர்ப்போட்டார் வன்முறையைத் தூண்டுமாறு பேசிய பேச்சுக்கள் கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட உமேஷி பவார், சாந்தாராம் ஷவ்லேக்கர், பிரதீப் கன்வில்கார் ஆகிய மூன்று பேர், குற்றத்தை நிரூபிக்கத் தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர்.