ஆட்சிக்கு ஆபத்து இல்லை - பிரதமர்!

செவ்வாய், 8 ஜூலை 2008 (16:48 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பிரச்சனையில் இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று பிரதமர் மனமோகன் சிங் கூறினார்!

ஜி-8 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் வந்துள்ள பிரதமரிடம் அயல்நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு பதிலளித்தார்.

இடதுசாரிகள் எடுக்கும் முடிவு குறித்து கவலையில்லை என்று பிரதமர் நேற்று கூறியிருந்த நிலையில், 59 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள இடதுசாரிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இன்று அறிவித்தனர்.

இந்நிலையில், அணு ஒ‌த்துழை‌ப்பு கு‌றி‌த்து, ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடனும், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (NSG) முக்கிய உறுப்பினர்களுடன் பிரதமர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஹூ ஜின்தாவோவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இடதுசாரிகள் ஆதரவு விலக்கிக் கொண்டாலும், 39 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடி கட்சியின் ஆதரவையும், 6 சுயேட்சைகளின் ஆதரவும் உள்ளதால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று டெல்லிச் செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்