அரசிற்கு ஆதரவாக வாக்களிப்போம்: சமாஜ்வாடி முடிவு!
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:40 IST)
மக்களவையில் மத்திய அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பி.க்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுபற்றி புது டெல்லியில் இன்று நடந்த சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், "சமாஜ்வாடி கட்சியின் முத்திரையுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள ஒவ்வொரு எம்.பி. யும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்து ஐ.மு.கூ. அரசைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை தங்கள் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பதாக வெளியான தகவல்களை முழுமையாக நிராகரித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், "வாரணாசி, சஹாரன்பூர், தியோபந்த், கான்பூர், பெய்ரேலி ஆகிய தொகுதிகளின் எம்.பி.க்கள் உள்ளிட்ட சமாஜ்வாடி கட்சியின் எல்லா எம்.பி.க்களும் அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பார்கள்" என்றார்.
இக்கூட்டத்தில் 10 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. இதில் 2 பேர் தனிப்பட்ட காரணங்களால் வரவில்லை, 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள், 2 பேர் அயல்நாட்டில் உள்ளனர், ஒருவர் சிறையிலும் மற்றொருவர் மருத்துவமனையிலும் உள்ளனர்.