ஆப்கானிற்கு இந்திய உயர்மட்டக் குழு விரைந்தது!
திங்கள், 7 ஜூலை 2008 (19:48 IST)
ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்காக இந்திய உயரதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு விரைந்தது.
ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய அயலுறவு அதிகாரி, ராணுவ அதிகாரி ஆகியோர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டெல்லியில் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்தில் நிலவும் சூழ்நிலையை ஆராய்வதற்காக மத்திய அயலுறவு அமைச்சகச் செயலர் நலின் சூரி தலைமையிலான உயர்மட்டக் குழு ஆப்கான் விரைந்தது.
இக்குழுவில் உள்துறை அமைச்சக அதிகாரிகளும், அயலுறவு அமைச்சக அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் ஆப்கானில் பணியாற்றும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பளிப்பது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள்.
இதற்கிடையில் கொல்லப்பட்ட இந்தியர்களின் விவரம், பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஆர்.டி.மேத்தா, அயலுறவு அதிகாரி வி.வெங்கடேஷ்வர ராவ், தூதரக ஊழியர்கள் அஜய் பதானியா, ரூப் சிங் என்று தெரிய வந்துள்ளது.
சோனியா காந்தி கண்டனம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதலிற்கு அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தாருக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.