முல்லைப் பெரியாறு: புதிய அணைதான் நிரந்தரத் தீர்வு- கேரளா!
திங்கள், 7 ஜூலை 2008 (15:37 IST)
நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளது என்று மீண்டும் கூறியுள்ள கேரள நீர் வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், இப்பிரச்சனைக்கு புதிய அணை கட்டுவதுதான் நிரந்தரத் தீர்வு என்று சட்டப் பேரவையில் கூறினார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ள அவர், புதிய அணை கட்ட வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை நியாயம் என்பதை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த டெல்லி ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் குழு அளித்துள்ள பரிந்துரை காட்டுவதாகக் கூறியுள்ளார்.
பலத்த மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் அதைத் தாங்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணை இல்லை என்பதை டெல்லி ஐ.ஐ.டி. வல்லுநர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில் டெல்லி ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் அளித்துள்ள ஆய்வறிக்கைகளை தனது தரப்பு வாதத்திற்கு ஆதாரமாக கேரள அரசு முன்வைக்கும் என்றும் அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழக அரசிற்கு எதிரான முல்லைப்பெரியாறு அணை வழக்கை நடத்துவதற்காகவே கேரள அரசு மின்சார வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசினால் இயக்கப்படுகிறது.
அதிகமான நிலப்பரப்பிற்குப் பாசனம் அளிக்கும் வகையில் இந்த அணையின் உயரத்தை 152 அடியாக அதிகரிப்பது தொடர்பாக தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது.
அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் கேரளா, அணை பலவீனமாக உள்ளது என்று காரணம் கூறி வருகிறது.